Monday 11 May 2015

விண்வெளியில் உள்ள புதன் கிரகத்தில் தற்போது இருக்கும் மின்காந்த புலத்தின் வயது சுமார் 400 கோடி ஆண்டுகள் என்று நாசாவின் 'மெஸெஞ்சர்' விண்கலம் மூலம் தெரிய வந்துள்ளது.

சூரியக் குடும்பத்தில் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் புதன் ஆகும். இந்த கிரகத்தில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக 2004ம் ஆண்டு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா 'மெஸெஞ்சர்' எனும் ஒரு விண்கலத்தை ஏவியது.

2008ம் ஆண்டில் புதன் கிரகத்தை நோக்கிப் பயணித்த அந்த விண்கலம், 2011ம் ஆண்டு முதல் அந்த கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் இருந்துகொண்டு தகவல்கள் வழங்கி வந்தது. பின்னர் கடந்த சில வாரங்களுக்கு முன்னால் அந்த கிரகத்துக்குள் நுழைந்த அந்த விண்கலம், மிகச் சமீபத்தில் தன் செயல்பாட்டை நிறுத்திக்கொண்டது.

இந்நிலையில், இந்த விண்கலம் 2014ம் ஆண்டு இறுதி மற்றும் 2015ம் ஆண்டு ஆரம்பத்தில் பூமிக்கு அனுப்பிய தகவல்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

அப்போது புதன் கிரகத்தில் உள்ள மின்காந்த வெளி சுமார் 370 கோடி அல்லது 390 கோடி ஆண்டுகளாக அங்கு இருந்து வருகிறது என்று அறியப்பட்டுள்ளது. ஏற்கெனவே அந்த கிரகத்தில் மின்காந்த வெளி இருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் அறிந்திருந்தாலும், அது எப்போது தோன்றியது என்பதை அறிந்திருக்கவில்லை.

சூரியக் குடும்பத்தில் பூமிக்கு அடுத்து புதன் கிரகத்தில் தான் இத்தகைய மின்காந்த வெளி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகத்தில் ஆரம்பத்தில் மின்காந்த வெளி இருந்திருந்தாலும் சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அது மெல்ல மெல்ல மறைந்துவிட்டது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேலும், பூமி உருவான அதே காலக்கட்டத்தில்தான் புதன் கிரகமும் உருவாகியிருப்பதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதாவது 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் புதன் கிரகம் உருவாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இது பற்றிய விவரங்கள் ‘சயன்ஸ் எக்ஸ்பிரஸ்’ என்ற இதழில் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment