Monday, 11 May 2015

ஜெயலலிதா | கோப்புப் படம்
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.
மேலும், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதேபோல், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவையும் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி ரத்து செய்து உத்தரவிட்டார்.

இரண்டே நிமிடத்தில் தீர்ப்பை வாசித்த நீதிபதி:

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வெறும் 2 நிமிடங்களில் தீர்ப்பை வழங்கினார்.
சரியாக காலை 11 மணிக்கு நீதிமன்றத்தின் அறை எண் 14-க்குள் நுழைந்த நீதிபதி குமாரசாமி எடுத்துவுடன், "சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்" என்றார்.
தொடர்ந்து தீர்ப்பை வாசித்த அவர், "சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ததற்கான குற்றச்சாட்டை அரசு தரப்பு வழக்கறிஞர் நிரூபிக்கவில்லை.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழங்கப்பட்ட சாட்சியங்கள் ஏற்புடையதாக உள்ளது. எனவே, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்" என்றார்.
11.02 மணிக்கு தீர்ப்பை வழங்கி முடித்தார். 11.03 மணிக்கு நீதிமன்ற அறையில் இருந்து வெளியேறினார்.
தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே அதிமுகவினர் "புரட்சித்தலைவி வாழ்க" என கோஷமிட்டனர். இதற்கு கர்நாடக போலீஸார் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அதிமுக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்:
இதனையடுத்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டின் முன் அதிமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை, கோவை, நெல்லை என தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கு பின்னணி:
1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. 18 ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார். மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் மற்ற மூவருக்கும் தலா ரூ. 10 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.
இதனிடையே நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், ‘மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்' என கால வரையறை நிர்ணயித்தது.
இதையடுத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டு சி.ஆர்.குமாரசாமி நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஜனவரி 5-ம் தேதி தொடங்கிய‌ மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 41 நாட்களில் நிறைவுபெற்றது.
இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 11-ல் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி இன்று (மே-11) தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுவதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment